துபாயில் ஓய்வு நேரங்களில் பொது நூலகத்துக்குச் செல்வது வழக்கம். இன்று துபாயின் ரசிதியா பகுதியில் உள்ள பொது நூலகத்திற்குச் சென்ற போது, மராமத்துப் பணிகள் நடைபெறுவதால் நூலகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது என்றனர் நூலக அலுவலர்கள்.
மேலும் அதற்காக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைப் பொறுத்தருள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனே எனக்கு எங்களது ஊரான முதுகுளத்தூர் நூலகம்தான் நினைவுக்கு வந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் ஊரில் இருந்தபோது, அந்த நூலகம் எப்பொழுது திறக்கப்படும் என்பது இறைவனுக்கே வெளிச்சம். சில நேரங்களில் நாங்களே சாவிப் போட்டு திறந்த அனுபவமும் உண்டு.
உள்ளே நுழைந்தால், உட்காரக்கூட நாற்காலிகள் இருக்காது. பல நாள் பழைய தினசரிகளைப் படித்த அனுபவங்களும் உண்டு.
புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்குள் ஒரு பகீரதப் பிரயத்தனமே செய்து முடித்திருப்போம். நூலகர், தானும் படிக்க மாட்டார். படிக்கக் கொடுக்கவும் அவருக்கு மனம் வராது. எத்தனையோ முறை, எலேய்… புஸ்தகம் புதுசா இருக்கு… கொண்டுபோய் கிழிச்சிப்பிடாதே… என புதிய புத்தகங்களை யாருக்கும் தராமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்தவர் அவர்.
வாசகர்களைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாத மனிதர் அந்த நூலகர்.
சொந்தக் கட்டடம் கூடக் கிடையாது அந்த நூலகத்துக்கு. அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையிலா இருக்கிறார்கள் நம்மவர்கள்.
தற்பொழுது எப்படியோ? எனினும் நூலகத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாதது பெருத்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக நண்பர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
நூலகங்கள், கிட்டத்தட்ட கோயில் அல்லது வழிபாட்டுத் தலத்துக்குச் சமமானவை. எங்காவது வாடகைக் கட்டடத்தில் கோயிலோ அல்லது பிற வழிபாட்டுத் தலங்களோ இயங்கிப் பார்த்திருக்கிறீர்களா?
நம் நாட்டில்தான் இந்த அவலம். வெளிநாடுகளில் நூலகத் துறைக்கும் நூலகங்களுக்கும் கிடைக்கும் மரியாதையே தனி.
முதுகுளத்தூர் நூலகத்துக்கு இனியாவது நிரந்தர கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பார்களா…? பார்ப்போம்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply