
பிரமீட் சாய்மீரா நிறுவனம் ஒரே நேரத்தில் பத்து படங்களுக்குப் பூஜை போட்டு ‘சாதனை’ப் படைத்துள்ளது. ஆனால் இந்த 10 படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் வெவ்வேறு நபர்கள். ஒரு காலத்தில் ஓகோ என கொடிகட்டிப் பறந்து பின்னர் தோல்விப் படங்களால் நொடித்துப் போனவர்கள். உண்மையான தயாரிப்பாளர் பிரமிட் சாய்மிரா நிறுவனம்.
அதாவது சாய்மிராவிடம் தயாரிப்பாளர்களாக வேலை பார்க்கப் போகிறார்கள் இந்த 10 பேரும்.
ஆரம்பத்தில் தியேட்டர்களை ஒப்பந்தத்திற்கு எடுத்து வந்த பிரமீட் சாய்மீரா நிறுவனம் பின்னர் விநியோகத்திலும் ஈடுபட்டது. இப்போது தயாரிப்பிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் அதை நேரடியாகச் செய்யாமல் குறுக்கு வழியில் தமிழ் சினிமாவின் அத்தனை அதிகார மையங்களையும் வளைத்துப் போடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக ஒரே நாளில் 10 படங்களுக்கு பூஜை போட்டு ‘சாதனை’ படைத்துள்ளது. சென்னை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் இதற்கான பிரமாண்ட விழா நடந்தது.
பிரமிட் சாய்மீரா இயக்குனர் நாராயணன், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராமநாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி., பிரமிட் சாய்மீரா நிர்வாக இயக்குனர் சாமிநாதன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்று, சாய்மிராவிடம் நிதி உதவி பெற்ற தயாரிப்பாளர்கள்:
கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் (இயக்கம் - கிருஷ்ணா),
தெய்வானை மூவி மேக்கர்ஸ் (இயக்கம் - ஜெயப்பிரகாஷ்),
சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் (இயக்கம் - எஸ்.பி.ராஜகுமார், படப் பெயர் அழகர் மலை),
ராமநாதனின் ராஜ் பிலிம்ஸ் (இயக்கம் - விஷ்ணு சங்கரன்),
கரகாட்டக்காரன் புகழ் கருமாரி கந்தசாமியின் விஜயா மூவிஸ் (இயக்கம் தயா செந்தில்),
அழகன் தமிழ்மணியின் ஸ்ரீநாச்சியார் அம்மன் பிலிம்ஸ் (இயக்குநர்-பின்னர் அறிவிக்கப்படும்),
கே.பாலுவின் மலர் பிலிம்ஸ் (இயக்கம் - ரத்னகுமார்),
கே.ராஜனின் கே.ஆர்.பி. புரடக்ஷன்ஸ் (இயக்கம் -மனோஜ்குமார்),
ராதாரவியின் பிஆர்ஆர் ஆர்டஸ் (இயக்குநர்- பின்னர் அறிவிக்கப்படும்),
சின்மயா கம்பைன்ஸ் (இயக்கம் - பிரவீன் காந்த்)
ஆகியோர் இப்படங்களைத் பிரமீட் சாய்மீராவுக்காக தயாரிக்கவுள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் பத்து படங்கள் தயாரிப்பதும், பூஜை போடுவதும் இதுவே முதல் முறை என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர்.
அடுத்து மேலும் 14 படங்களுக்கு பூஜை போடப் போகிறார்களாம். கே.ஆர்.ஜி., கலைப்புலி சேகரன் எல்லாம் தயாரா…. அடுத்த ரெக்ரூட்மெண்ட்டுக்கு?
-எஸ்.எஸ்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply